திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை வீட்டில் ரெய்டு..!
திருவண்ணாமலை திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் இருந்து கடந்த இரண்டு முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.என்.அண்ணாதுரை. 2019 தேர்தலில் 58.21 சதவீத வாக்குகள் வாங்கி வென்றவர், 2024 தேர்தலில் 47.75 சதவீத வாக்குகள் வாங்கி வென்றார். திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் முகங்களில் ஒன்றாக அறியப்படுகிறார் அண்ணாதுரை.
இதற்கிடையே, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூரில் இருந்து வந்த ஒரு குழு, திருவண்ணாமலையிலிருந்து வந்த குழு என லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாதுரை வீடு மட்டுமல்ல, அவர் தொடர்பான தேவனாம்பட்டு பகுதியில் உள்ள பூர்வீக வீடு, ஏபியு கட்டுமான அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டிற்காக நிகழ்ச்சிக்காக மலப்பம்பாடி ஏரியில் மண் அள்ளப்பட்டது. அண்ணாதுரைக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் மூலமாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் புகார் எழுப்பி இருந்தது.
கடந்த ஜூன் மாதம் இதே திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் முக்கிய நபராக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது அண்ணாதுரை வீட்டிலும் ரெய்டு நடந்து வருவது திருவண்ணாமலை மாவட்ட அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




