ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு!
ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் தொடர்பான போக்சோ வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் வீரமணியிடம் புழல் சிறையிலேயே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது வீரமணியின் நெருங்கிய உதவியாளராக இருந்த கணேசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கணேசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் வீரமணியும் ஒரு சிறுமியும் தொடர்புடையதாக கூறப்படும் வீடியோ இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். வீரமணி நடத்தி வந்த நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய கணேசனுக்கு, வீரமணி தொடர்பான பல்வேறு தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணேசனின் செல்போனுக்கு அந்த வீடியோவை அனுப்பியது யார்? அது எப்போது அனுப்பப்பட்டது? அந்த வீடியோவை கணேசன் வேறு யாருக்காவது அனுப்பினாரா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு போலீசார் பதில் தேடி வருகின்றனர். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படும் வீரமணியின் டைரி தற்போது விசாரணையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரமணி தனது வரவு – செலவு கணக்குகளை டைரியில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அந்த டைரியை போலீசார் ஆய்வு செய்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவுகள் இருப்பதாகவும், அந்த தொகை சுமார் 70 கோடி ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணப்பரிமாற்றத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டியில் இருந்ததாக கூறப்படும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்று பணம் திரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் தற்போது போலீஸ் விசாரணையின் ஒரு பகுதியாகவே உள்ள நிலையில், டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வழக்கில் மற்றொரு முக்கிய நகர்வாக எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வீரமணி கைது செய்யப்பட்டதோடு இந்த வழக்கு முடியவில்லை. அவரை சுற்றியிருந்தவர்களிடமும் விசாரிப்பதன் மூலம் விசாரணை வட்டம் மேலும் மேலும் விரிவடைந்து வருகிறது. டைரியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையா… அந்த பணம் யாருக்கெல்லாம் சென்றது என்பதுதான் தற்போது போலீசாரின் விசாரணையில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. அடுத்தடுத்து இந்த வழக்கில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவை அமைக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முத்துராசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் ஏடிஜிபி அருண் மற்றும் ஐஜிபி கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மறுநாளே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




