முதலமைச்சர் காப்பீடு திட்டத் தொகை ரூ.25 லட்சம் உயர்த்தி அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 5ஆம் தேதி கூடிய நிலையில், அன்றைய தினம் 2026 -27 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேளாண் பட்ஜெட், அதன் பிறகு நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் என தொடர்ந்து சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சட்டப்பேரவை தொடங்கியது. இதில் முதலிலேயே 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய் மருத்துவத் துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல் அறிவிப்பாக, தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை” அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். தொடர்ந்து இரண்டாவது அறிவிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 இலட்சத்திலிருந்து ரூபாய் 25 இலட்சமாக உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தார்.
அதேபோல் மூன்றாவது அறிவிப்புக்காக திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் 7 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் 673 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் விஜய், தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் மையங்கள் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.
அதேபோல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஜி +8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என்றும், மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், தருமபுரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ஹெச்பிவிடிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்றும் மருத்துவத் துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




