சென்னைக்கு அருகில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பிறகே புயல் உருவாகுமா என்பது பற்றி கணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமுதா, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக தெரிவித்தார். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரையில் தற்போதுவரை 59 சதவீதம் கூடுதலாகவே மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார்.





