தீபாவளிக்காக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துக் கட்டணம் குறைப்பு..!
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், பொதுமக்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் புகார்களுக்குப் பிறகு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள், தற்போது பயணிகள் நலன் கருதி குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை – மதுரை ஆம்னி பேருந்து கட்டணம் முன்னர் ரூ. 4,000 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 2,600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை – திருநெல்வேலி ஆம்னி பேருந்து கட்டணம் ரூ. 5,000 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ. 3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தீபாவளிக்குப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இது பெரும் ஆறுதலை அளித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லப் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு வரை உயர்த்தப்பட்ட நிலையில், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் குழும ஆணையர் கஜலட்சுமி தலைமையில் இன்று (அக்டோபர் 14, 2025) ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஆம்னி பேருந்துகள் விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்றும், தற்போது அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்துள்ளதால், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டதைப் போல இம்முறையும் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் ஆணையர் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை – மதுரை பயணத்துக்கு ரூ. 4,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், ரூ. 2,600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை – திருநெல்வேலி (நெல்லை)ஆம்னி பேருந்து கட்டணம் ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், ரூ. 3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, கோவை உள்ளிட்ட பிற இடங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த அதிரடிக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை பயணிகளுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக டிக்கெட் முன்பதிவு செயலிகளிலும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது மண்டல வாரியாகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் (RTOs) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட் முன்பதிவு செயலிகளிலும் விரைவில் கட்டணக் குறைப்பு அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை காலக்கட்டமான அக்டோபர் 14 முதல் 21 வரை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் அல்லது பிற புகார்களுக்குக் கீழ்க்கண்ட எண்கள் மூலம் பயணிகள் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வழியாகப் புகார் தெரிவிக்கலாம்.






