--- --:--:-- --

குரூப் 2ஏ தேர்வு திட்டத்தில் மொழிப் பாடம் நீக்கம்..!

3

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

 

இந்த தேர்வுக்கு 13.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த முறை மொழிப் பகுதியான தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து கேட்கப்படும் 60 வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அறிவில் 150 வினாக்களும் திறனறியில் 50 வினாக்களும் கேட்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது மொழிப் பாடங்களை நன்றாக படித்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக தேர்வர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

 

குறிப்பாக ஆங்கில மொழிப் பாடங்களை படித்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் தமிழ் மொழிப்பாடங்களை படித்தவர்கள் முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு ஆகிய இரண்டுக்கும் ஒரளவு பொதுவான பாடத்தலைப்புகளை படிப்பர். இதனால் அவர்களுக்கு மொழிப் பாடம் நீக்கம், மதிப்பெண்கள் பெறுவதில் சிரமத்தை அளித்தாலும் பெரிய ஏமாற்றம் இருக்காது.

 

ஆனால் ஆங்கில மொழிப் பாடத்தை முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்து எழுதியவர்கள், முதன்மைத் தேர்வுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்காக தமிழ் மொழிப்பாடத்தை படிக்க வேண்டும். மேலும் ஆங்கில பாடத்தில் கேட்கப்படும் 60 வினாக்கள் நீக்கப்பட்டுள்ளதால், மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

 

மேலும் முதன்மைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் தமிழ் சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற தலைப்பில் 30 கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இது தமிழ் மொழிப் பாடங்களை நன்றாக படித்தவர்களுக்கு உதவும். அதேநேரம் ஆங்கில மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதால், அதில் கேட்கப்படும் இலக்கியம், இலக்கணம் சார்ந்த எளிய கேள்விகள் இல்லாமல், ஆங்கில மொழிப் பாடம் படித்தவர்கள் மதிப்பெண்கள் பெற சிரமப்படுவர்.

 

குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் மொழிப்பாடங்கள் அதிக மதிப்பெண்கள் பெற உதவுவதாக கூறப்படும் நிலையில், முதன்மைத் தேர்வில் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொது அறிவு பகுதிக்கான பாடத்திட்டம் மிகப் பெரியது, கேள்விகளின் கடினத்தன்மையும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், தேர்வர்கள் மொழிப் பாடங்களையே அதிகம் சார்ந்து இருப்பர். ஆனால் தற்போதைய தேர்வு திட்டம் மாற்றம் மொழிப் பாடத்தை சார்ந்திருக்கும் நிலையை மாற்றியுள்ளது.

 

அதேநேரம் இந்த தேர்வு திட்டம் மாற்றம் தமிழ் மொழிப் பாடத்தை நன்றாக படித்தவர்களுக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வேலை கிடைக்க வழிவகுக்கும் மதிப்பீட்டுத் தேர்வான குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon