விஜய் பேச்சை வரவேற்ற திருமாவளவன்..!
பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என விஜய் கூறியிருப்பதன் மூலம் பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமானால் விஜய் கூறியதை வரவேற்கிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய் மாற்று சக்தியாக கருதி அவரின் கருத்தை கூறியிருக்கிறார் என நம்புகிறேன். ஆனால் அதிமுகவை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசியதாக தெரியவில்லை. கொள்கை எதிரிகளின் பட்டியலில் அதிமுக உண்டா இல்லையா என்று அவரின் உரையில் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும், திமுக ஆளும் கட்சி என்கிற முறையில் அதனை எதிர்ப்பது என்பது எல்லோருக்கும் இயல்பான ஒன்று என்றும், ஆளுங்கட்சியை எதிர்த்து தான் செயல்பட முடியும். அது வாடிக்கையான ஒன்று. அதன் அடிப்படையில் நடிகர் விஜய் அவர்களும் அதன் கருத்தை சொல்லியிருப்பது இயல்பான ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் குறித்து விஜய் கூறியிருப்பது தொடர்பாக கேட்டபோது, பரந்தூர் விமான நிலைய பிரச்சினை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் உட்பட எல்லாக் கட்சிகளும் அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தோம். அதையும் தாண்டி செயல்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு இழப்பீடு தருகிறது என்ற அடிப்படையில் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
குறிப்பிட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் குடியிருப்புகளை தவிர்த்துவிட்டு அருகில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை அதற்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கவனத்திற்கு பலமுறை எழுத்து மூலமாக கொண்டுசென்றிருக்கிறோம் அமைச்சர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். ஆனாலும் அரசு இழப்பீடு தருவதில் ஆர்வம் காட்டுகிறது. இந்த நிலையில் விஜய் அவர்கள் சொல்லியிருக்கிற கருத்து அவருடைய நிலைப்பாட்டை காண்பிக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





