--- --:--:-- --

தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அமித்ஷா ஏற்கனவே அறிவித்துவிட்டார் – ஈபிஎஸ்

2

கட்சியை வளர்ப்பதற்காக மற்ற கட்சிகளை விமர்சிப்பது இயல்பு என்று விஜய் குறித்து கருத்து தெரிவித்த ஈபிஎஸ், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கெனவே அமித் ஷா அறிவித்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வரும் திங்கட்கிழமை முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணத்தை தொடங்குகிறார்.

 

இதனை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த ஈபிஎஸ், பிரசார சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை வெளியிட்டார்.

 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் உள்ள குறைகளை மக்களிடம் எடுத்துரைப்பதே இந்த பரப்புரையின் நோக்கம் என்று கூறினார். அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், தங்கள் கட்சியை வளர்க்க மற்றவர்களை விமர்சிப்பது இயல்பானது தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பவர்கள் தங்கள் அணியில் இணைவார்கள் என்று கூறினார்.

 

மேலும், முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கெனவே அமித் ஷா தன்னை அறிவித்து விட்டதாகவும் ஈபிஎஸ் விளக்கம் அளித்தார். திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திட்டம் குறித்தும் ஈபிஎஸ் விமர்சித்தார். இந்நிலையில், தேமுதிகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, ஜனவரிக்கு பிறகு அதனை பார்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

 

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே “ஒய் பிளஸ்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் வந்தது.

 

அதேபோன்று, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திலும், சேலம் வீட்டிலும் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், வரும் திங்கட்கிழமை முதல் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon