ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை – ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், எல்லைக் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை துல்லியமாக குறிவைத்து தகர்த்துள்ளது. இதில் பல முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் நேற்று மட்டும் சுமார் 15 நபர்கள் பலியாகினர். அதேபோல், இன்றும் பாகிஸ்தான் எல்லை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பாதுகாப்புக் குழுவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப் “எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் தற்காப்பிற்காகவே இருந்தன; இந்தியாவிற்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி தாக்குதலை நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.இந்நிலையில், இன்று விளக்கம் கொடுத்துள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன.
கற்பனை செய்ய முடியாத தாக்குதலை இந்தியா நிகழ்த்தி உள்ளது; இது இந்தியாவுக்கு பெருமை மிகுந்த தருணம். அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களை பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளோம்.இந்தியாவின் தரத்தையும், அதன் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; தொடரும். நாம் எப்போதும் பொறுப்புள்ள தேசமாக இருந்துவருகிறோம்.
எப்போதும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் நம் பொறுமையை மற்றவர்கள் முறையற்ற வழியில் பயன்படுத்திக்கொண்டால், அவர்கள் நேற்று சந்தித்தது போன்றதொரு தரமான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அதேசமயம், எதிர்காலத்திலும் இதுபோன்ற பொறுப்பான பதிலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




