தீக்குளிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த மீனவர்கள்..!
இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் மீன்பிடி படகுகளுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இராமநாதபுரத்தில் தீக்குளிப்பு போராட்டத்தை மீனவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ஐந்தாவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.ர் தீக்குளிப்பு போராட்டத்தை மீனவர்கள் அறிவித்திருந்ததால் தீயணைப்பு கருவிகளுடன் வீரர்கள் மற்றும் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்ட நிலையில் தீக்குளிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். இலங்கை கடற்படை வசம் உள்ள மீன்பிடி படகுகளுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான உதவி தொகை 350 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் தீக்குளிப்பு போராட்டத்தை மீனவர்கள் ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் மீனவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.






