ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞர் நினைவு சின்னம்!
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திமுகவினராலும் தமிழக அரசாலும் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன வகைகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னெடுக்கலாம் என்பது குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவரைப் பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரிய அளவிலான ஆடம்பர நிகழ்ச்சிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக இவற்றை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாகவும் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.





