--- --:--:-- --

சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுக்கு ரூ.560 பில்!

4

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் நகரில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று வாடிக்கையாளர் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 6 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.560) கட்டணம் வசூலித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

 

 

கடந்த வாரம் வாடிக்கையாளர் ஒருவர், சார்லட் நகரில் உள்ள ‘STATS’ என்ற ஸ்போர்ட்ஸ் பார் (Sports Bar) வழங்கிய பில்லை த்ரெட்ஸ் சமூக வலை தளத்தில் பகிர்ந்ததோடு இந்த சர்ச்சை வெடித்தது. அந்த கூடுதல் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், “நான் போலீஸுக்கு போன் செய்யப் போகிறேன். இதெல்லாம் ஒரு குற்றச் செயல்” என பதிவிட்டிருந்தார்.

 

 

 

அவர் பகிர்ந்த ரசீதின்படி, 28 டாலர் மதிப்புள்ள ‘காஜுன் ஆல்ஃபிரடோ’ (Cajun Alfredo) பாஸ்தா, 1.02 டாலர் சேவைக் கட்டணம், 5.10 டாலர் டிப்ஸ் மற்றும் 3.15 டாலர் வரி ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன. இவற்றுடன் சேர்த்து ‘டூ-கோ பாக்ஸ்’ (To-go box – பார்சல் டப்பா) என்பதற்காக கூடுதலாக 6 டாலர்கள் வசூலிக்கப்பட்டிருந்தது.

 

 

நான்கு பேர் கொண்ட குழுவாக அங்கு சென்றிருந்ததாகவும், பானங்கள் ஆகியவற்றுக்கு சேர்த்து பணம் செலுத்தியதாகவும் அந்நபர் விளக்கியுள்ளார். ஆரம்பத்தில் உணவைப் பார்சல் வாங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், பாஸ்தாவை முழுமையாக சாப்பிட முடியாமல் வயிறு நிரம்பிவிட்டதாலேயே மீதமிருந்த உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பார்சல் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ‘STATS’ உணவகம் இன்ஸ்டாகிராமில் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது, கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தங்கள் உணவகத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் உணவகத்திற்கு உள்ளே அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பாதி விலையில் பாஸ்தா வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

 

சலுகை விலையிலான பாஸ்தாவை பார்சலாக வாங்குபவர்களுக்கு வழக்கமான முழு விலையே வசூலிக்கப்படும் என்றும், மேஸின் பில்லில் சேர்க்கப்பட்ட 6 டாலர் என்பது பார்சல் டப்பாவிற்கான கட்டணம் அல்ல சலுகை விலையை சரிசெய்ய போடப்பட்ட கட்டணம் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

 

 

பில்லிங் முறையில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்து, இனி ரசீதுகளில் கட்டண விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படும் என உணவகம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், “உணவகத்திற்கு உள்ளேயே அமர்ந்து சாப்பிட்டு, வயிறு நிரம்பியதால் மிச்சமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாடிக்கையாளரிடம் ஏன் இந்த கூடுதல் விலையை வசூலிக்க வேண்டும்?” என்ற வாடிக்கையாளரின் முக்கியக் கேள்விக்கு உணவகத்தின் விளக்கத்தில் எவ்வித பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon