ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் எனத் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர் துரை, வடமாவட்டங்களைக் காட்டிலும் தென் மாவட்டங்களில் மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், அது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதாகத் தெரிவித்தார்.
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு 21 சதவீதம் குறைவாகப் பதிவானதாகவும் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் எனவும், வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் வி.ஆர் துரை தெரிவித்தார்.
இதனிடையே, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் இம்மாத இறுதியில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்று சுழற்சி உருவாகி பின்னர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




