ஒரே ஒரு வீடியோ, எங்க நிம்மதியே போச்சு – வீரமணி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி வீரமணி. அதே ஊரைச் சேர்ந்த சுமங்கலி என்ற எம் ஏ பி ஏட் பட்டதாரி பெண்ணை திருமணம் முடித்து மதுரையில் அனுப்பானடி பகுதியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, கடந்த 5 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார் வீரமணி.
மதுரை தமிழிவ் ‘வீரமணி Vlogs’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவருக்கு, நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த நிலையில்தான், தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிட ஆசைப்பட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் வீரமணி. அதில் “எனக்கு ஸ்வீட் அனுப்பி வையுங்கள்” எனக் கேட்டதோடு, தனது செல்போன் எண்ணையும் வீட்டு முகவரியையும் வீடியோவில் பகிர்ந்து, கமெண்ட்டிலும் பின் செய்திருக்கிறார்.
அவ்வளவுதான், அடுத்த சில நாட்களில் அவரது வீட்டை நோக்கி பார்சல்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டன. முதலில் ஸ்வீட் பாக்ஸ் வரும் என எதிர்பார்த்த வீரமணிக்கு, அடுத்தடுத்து வந்த ஆர்டர்களைப் பார்த்து தலைசுற்றியிருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்கள் மட்டுமின்றி, உணவு டெலிவரி செயலிகள் மூலமாக பிரியாணி உள்ளிட்ட உணவுகளும் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்கள் குவிந்துள்ளன. அதுமட்டுமின்றி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என வீட்டு உபயோகப் பொருட்களின் ஆர்டர்கள் அடுத்தடுத்து வந்துள்ளன.
ஒரு நாளைக்கு பல டெலிவரி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து, பார்சலைக் கொடுத்துவிட்டு பணம் கேட்டுள்ளனர். தான் எதையும் ஆர்டர் செய்யவில்லை என வீரமணி விளக்கினாலும், அடுத்தடுத்த ஆர்டர்கள் வருவது நின்றபாடில்லை. இதனால், டெலிவரி ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் நிலையும் உருவானது. இனி எனக்கு எதுவும் அனுப்ப வேண்டாம் என வீரமணி வீடியோ வெளியிட்ட நிலையிலும், ஆர்டர்கள் வருவது குறையவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணியும் சுமங்கலியும் வீட்டில் உள்ள பொருட்களை விற்றுவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டனர். லைக், ஷேர் வாங்குவதற்காகப் பகிர்ந்த ஒரு வீடியோ, கடைசியில் தங்களது நிம்மதியையே பறித்துவிட்டதாகவும், மற்றவர்கள் தங்களது அனுபவத்தைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுமங்கலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ள கேரள காவல்துறை, சமூக வலைதளப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நகைச்சுவைக்காகவோ, ட்ரெண்டில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவோ, தங்களது செல்போன் எண் மற்றும் வீட்டு முகவரியைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் எனக் கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு நிமிடப் பொழுதுபோக்குக்காகப் பகிரப்படும் தகவல், நிஜ வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எச்சரிக்கை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





