நடிகர் தனுஷின் அடுத்த மூவ்.!
தமிழ் சினிமாவிலிருந்து நடிகர்கள் அரசியல்வாதி அவதாரம் எடுப்பது பலகாலமாகவே இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்று முதலமைச்சராக உள்ள விஜய் வரை கணக்கிட்டால் இந்த பட்டியல் நீளும். அந்த வரிசையில், தற்போது நடிகர் தனுஷும் அரசியல் அவதாரம் எடுக்கவுள்ளாரா என்ற கேள்வி பரபரப்பான விவாதமாக எழுந்துள்ளது. அதற்குக் காரணம், அவரது அண்மைக்காலச் செயல்பாடுகள்.
குறிப்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சென்னை அருகே மஞ்சங்கரணையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அவரது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலேயே அதற்காக சமிக்ஞைகள் வெளிப்பட்டன. ஏனென்றால் வழக்கமான சினிமா நடிகரின் நிகழ்ச்சியாக அல்லாமல் ஓர் அரசியல் கொண்டாட்ட நிகழ்ச்சி போலவே அது பலராலும் பார்க்கப்பட்டது.
அதன் பின்னர், கடந்த ஜூலை 28ஆம் தேதி அவரது பிறந்த நாளின்போது சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு உற்சாகக் களிப்புடனும் ஏராளமான ரசிகர்கள் திரண்டதும், அவர்களுக்கு தனுஷ், கையசைத்துத் தனது நன்றியைத் தெரிவித்ததும் கவனம் பெற்றது. இந்த நிலையில், கோவையில் நேற்று தனுஷ் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள தனுஷ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இதுவரை தனுஷ் ரசிகர் மன்றமாக மட்டுமே இருந்து வந்த இந்த அமைப்பை, தனுஷ் நற்பணி இயக்கமாகவும் மாற்றியுள்ளனர். நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு வெள்ளை நிற இலச்சினையில் நட்சத்திரங்கள் சூழ தனுஷ் கையெடுத்து கும்பிடுவதுபோல அது அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சராக உள்ள விஜய், நடிகராக இருந்தபோது தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியே அதன் பின்னர் அரசியலில் களம் புகுந்தார். எனவே அதுபோன்ற ஒன்றாகத்தான் தற்போது தனுஷின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அதை நோக்கியே அவர் காய்களை நகர்த்தி வருவதாகவும் ஆரூடம் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்!
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ள தனுஷ், 2031ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தனுஷ் கட்சியை பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் உலா வரும் நிலையில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




