--- --:--:-- --

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!

3

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக தலைமையில் என்ஏடி கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட நிலையில் திமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு விருப்பமுள்ள தொகுதிகளின் லிஸ்டை தயார் செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை மதிமுக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விருதுநகர், சிவகாசி, சிங்காநல்லூர், பல்லடம், கிணத்துக்கடவு, கடலூர், புவனகிரி, மதுரை தெற்கு, பாளையங்கோட்டை, கடையநல்லூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், கோவில்பட்டி, மொடக்குறிச்சி, சீர்காழி (தனி) உள்ளிட்ட 16 தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த முறை மதிமுக வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் மற்றும் அரியலூர் தொகுதிகளை இந்த முறை மதிமுக கேட்க போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியை பெற்று சிப்பிபாறை ரவிச்சந்திரனை களம் இறக்க பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியில் டாக்டர் ரொக்கையா, கடலூர் அல்லது புவனகிரி தொகுதியில் மதிமுக பொருளாளர் செந்தில்அதிபனை களமிறக்க மதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில் பங்கு வேண்டும்” என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் சென்னையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதில் பிளவை ஏற்படுத்த, சிலர் இது போன்ற கருத்துகள் மூலம் சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon