வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!
வங்கக்கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
12-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-02-2026: தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
14-02-2026: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-02-2026 மற்றும் 18-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.
ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நீலகிரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 13 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




