அண்ணா பல்கலை. பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை, மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்லூரிகளை இணையதளம் வாயிலாக தேர்வு செய்யலாம் எனவும், அதன் அடிப்படையில், மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு இடம், 17ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஜூலை 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025-26ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதிப் பெற்ற 417 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 467 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 166 இடங்களை நிரப்பவும் அனுமதிக்கப்பட்டதாக தமிழ்நாடு பாெறியியல் மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 7-ம் தேதி அறிவித்தது. மேலும் புதிததாக 4 பொறியியல் கல்லூரிகள் உட்பட தற்பொழுது 421 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நடப்பு கல்வியாண்டு (2025-26) அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




