மாரடைப்பால் காலமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ‘தாஜ்மஹால்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘விருமன்’, ‘மாநாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மனோஜ். இயக்குநர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு நடிப்பை விட இயக்குநர் ஆவதில் தான் விருப்பம் என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து தனது கனவை நோக்கி நடைபோட்டார். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்த மனோஜூக்கு காலம் கடிவாளம் போட்டது. 48 வயதான மனோஜ் பாரதிராஜாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. அவரது மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதையடுத்து மின்மயானத்தில் மனோஜ் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்பட்டது.