கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராம காவல்தெய்வம் ஸ்ரீஆலடிகருப்பசாமி கோவில் ,மிகவும் சக்தி வாய்ந்தவர், பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இம்முறை கடந்த (ஆடி மாதம்) ஆகஸ்ட் 6 ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கி , 8 நாட்கள் மண்டகப்படியுடன் கோலாகலமாக நடந்தது.
முன்னதாக, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை செல்வகணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு , ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அங்கிருந்து கோவில் பூசாரி MKS.குமார் கரகம் எடுத்து வருகையில் ஏராளமான பக்தர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக திருவீதியுலா சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அன்று மாலை நேர்த்திக்கடனாக கிடாய், சேவல், பலி கொடுத்து , பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். அன்று இரவு கொட்டும் மழையிலும் கும்மியடி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான ஆகஸ்ட் 14 ம் தேதி புதன்கிழமை ஆலடிகருப்பசாமி கோவிலில் சந்தனம் , பால், பன்னீர், இளநீர், விபூதி, மஞ்சள் பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அய்யனார் , காளி கோவிலில் வழிபாடு செய்து, முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, கிடாய், சேவல் பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வானில் வட்டமிட்ட 2 கருடர்
பக்தர்கள் பூரிப்பு…
முனீஸ்வரர் கோவில் எதிரே கிடாய்கள் பலி கொடுக்கும் இடத்தில் நேர் உச்சியில் , 2 கருடர்கள் வானில் வட்டமிட்டது . அசைவ அவதார கோலத்தில் இருக்கும் முனீஸ்வரர் கோவிலில், வானில் வட்டமிட்ட கருடரை பார்த்த பக்தர்கள் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கினர்.
பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாகத் திகழும் ஸ்ரீஆலடிகருப்பர், இக்கோவிலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர், மக்களை காக்கும் காவல் தெய்வமாவார். மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என பக்தர்கள் நம்புகின்றனர். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன், ஆலடியான் என்றும் அழைப்பதுண்டு.
இக்கோவிலில் இன்னொரு சிறப்பம்சம், கருப்பரின் மண்ணுக்கு தனி மகத்துவம் பெற்றிருப்பது தான். வெள்ளிக்கிழமை மற்றும் அம்மாவாசைகளில் ஆலடி கருப்பருக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்று. அந்த நாட்களில் தரிசனத்திற்கு நேரில் வந்து செல்லலாம். இதன் மூலம் பில்லி சூனியம், செய்வினை போன்ற தீய சக்திகள் நம்மையும் நமது வீட்டையும் அண்டாது என்ற நம்பிக்கை, பக்தர்களிடம் உள்ளது.
அன்னதான கூடத்தில் அண்டங்”காகா ” அட்ராசிட்டி..
ஆலடி கருப்பசாமி கோவில் திடலில் கீழக்கோட்டை கிராமத்தார்கள் சார்பில், பக்தர்களுக்கு கிடாய் கறி விருந்து வழங்கப்பட்டது . அதில் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கிருந்த அண்டங் “காக்கா ” கீ..கீ . கீனு.. கத்த ஆரம்பிச்சுருச்சு. இதனால் அங்கு சுற்றி இருந்தவர்கள் காக்கா மீது கடுப்பானார்கள். அதுமட்டுமா ? அங்கு படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளரையும் அந்த காக்கா விட்டு வைக்கவில்லை அவர் அருகிலும் சென்று தொல்லை கொடுத்தது.
இதனை பார்த்து கொண்டிருந்த பக்கத்தில் இருந்தவர் mani come.. (ம.ணி..கம்) என ஆங்கிலத்தில் அழைத்தார் சற்று நேரத்தில் அமைதியாகிவிட்டது. காக்கா பெயர் அதானோ என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் புரியாமல் புலம்பியதோடு, அன்னதான பந்தலில் நிற்பவர்கள் அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு ஆட்களை தேர்வு செய்யுங்கள் என்று உள்ளூர் மக்களுக்கு பக்தர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.