5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு
தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தடங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பாஜக என்று சாடினார்.
அப்படிப்பட்ட பாஜக-வுடன் சமூகநீதி பற்றி பேசும் ராமதாஸ், எப்படி கூட்டணி அமைத்தார்? என்று கேள்வி எழுப்பினார். மனது இல்லாமல் ஏன் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என்பது அவரது கட்சியினருக்கே தெரியும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்தார். அத்துடன், மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் இருந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
தேர்தலில் போட்டியிட உங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். மக்கள் மீது அக்கறை உள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் கூறினார்.மேலும், தமிழ்நாட்டின் துரோகி எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.
நீட் தேர்வு, சிஏஏ, வேளாண் சட்டம் என அனைத்துக்கும் மோடி அரசுடன் துணைநின்றவர் எடப்பாடி பழனிசாமி என்றார். எனவே, அவரின் பொய்களை பார்த்து மக்கள் சிரிப்பதாகவும் கூறினார். எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, அதிமுக வீழ்த்தப்படும் எனவும் முதலமைச்சர் சூளுரைத்தார்.
இதனிடையே, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை எனவும், வேண்டுமென்றால் கூட்டணி வைப்போம், இல்லாவிட்டால், விலகுவது எங்களது விருப்பம் எனவும் கூறினார்.
மேலும், திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அந்தக் கட்சியில் தொண்டர் ஒருவர் முதலமைச்சர் ஆக முடியாது எனவும், அது குடும்பக் கட்சி எனவும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




