காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளாவது வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் – மம்தா பானர்ஜி
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளாவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்று மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்த நிலையில், காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என மம்தா பானர்ஜி கூறியதை ஏற்க காங்கிரஸ் மறுத்தது. இதனால், தனித்துப் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
அதேநேரம், மேற்குவங்கத்தியில் ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரி, கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியதாகவும், நாடு முழுவதும் பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் 300 தொகுதிகளில் போட்டியிடுமாறு காங்கிரஸை கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்துவிட்டதால், தனித்துப் போட்டியிட தாங்கள் முடிவுசெய்ததாகவும் அவர் கூறினார். தற்போது காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளையாவது கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிப்பதற்காக, மேற்குவங்கத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




