இன்று முதல் 5 ஆயிரம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை..!
சென்னை தேனாம்பேட்டை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் சென்னையில் 5 ஆயிரம் ஆர்டிபிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரொனா மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தலைமையில் தொற்று பரவலை எதிர்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தமிழகத்தில் நேற்று 332 பேருக்கு தொற்று பரவியுள்ள நிலையில் நாட்டில் தற்பொழுது 1622 பேர் மருத்துவம் பெற்று வருவதாகவும் சென்னையில் மட்டும் 781 பேர் மருத்துவம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஐஐடி, சத்யசாய் கல்வி நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொற்று அதிகமாக இருந்தாலும் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் சென்னையில் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை 2500 பேருக்கு ஆர்டிபிசிஆர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் இன்று முதல் 5000 பேருக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





