கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பணம்..!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் கையூட்டு பெறப்படுவதாக வந்த தகவலையடுத்து கூடுவாஞ்சேரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளனர்.
அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் ரவிச்சந்திரனிடம் இருந்து கணக்கில் வராத மூன்றரை லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது. இதில் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியனின் அறையில் கணக்கில் வராத 88 ஆயிரத்து 500 ரூபாய் சிக்கியது. சாலிகிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் கணக்கில் வராத ரூபாய் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத நகை பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையாளர் ஜவகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.






