“பரபரப்பான சூழலில் நாளை அதிமுக செயற்குழு” பொதுச் செயலாளராக ஓ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்., என்ற பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா?
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது. இதில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஓ.பி.எஸ்., என்றும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் என்றும் ஒரு பார்முலா முன்வைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் இதற்கு இரு தரப்பும் சம்மதிக்குமா? அல்லது மல்லுக்கட்டு நடக்குமா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளானது. சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப் பட்ட நிலையில், ஓபிஎஸ் தனி அணியாக ஆவர்த்தனம் செய்தார். இதனால் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தது.
சில மாதங்களிலேயே இரு அணிகளின் இணைப்பு நடந்தாலும், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இரு கோஷ்டிகளும் பிரிந்தே செயல்பட்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது.கட்சியில் பதவி நியமனத்தின் போதும், ராஜ்யசபா எம்.பி. சீட் ஒதுக்கீடு, மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு போன்றவற்றிலும் இரு கோஷ்டிகளுக்கும் மல்லுக்கட்டு என்பது சகஜமாகி விட்டது.
கட்சியில் பெரும் பிளவு
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை சமீபத்தில் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். பெரும்பான்மை அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர் என கை காட்ட, ஓபிஎஸ் தரப்போ வெகுண்டெழுந்தது. அம்மாவின் ஆசி பெற்ற, சுட்டிக் காட்டிய ஒரே முதல்வர் ஓபிஎஸ் தான் என போஸ்டர்கள் முளைக்க கட்சியில் பெரும் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் கையெழுத்துடன் அவசரமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட கட்சி விஷயங்களை யாரும் வெளியில் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போடப்பட்டது.
மேலும் இதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் கூட்டமும் அவசர அவசரமாக கடந்த சில தினங்களுக்கு முன் கூடியது. இந்தக் கூட்டத்தில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையேல் ஜெயலலிதா இருந்தது போல் கட்சியில் முழு அதிகாரம் படைத்த பொதுச் செயலாளராக தம்மை நியமிக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் பிடிவாதம் காட்டியதாகவும், இதனால் அமைச்சர்கள் இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடத்தியதால் சலசலப்பு எழுந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் எடப்பாடி வீட்டில் அவரது ஆதரவு அமைச்சர்களும், ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவு அமைசசர்களும் தனித்தனியே ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
புதிய பார்முலா
அதிமுகவில் வெடித்த இந்த விவகாரம் டெல்லி பாஜக தரப்பின் பஞ்சாயத்துக்கும் சென்றது. ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்புமே டெல்லி பாஜக தலைவர்களிடம் முட்டி மோதிய நிலையில், பாஜக தரப்பு ஒரு புதிய பார்முலாவை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது கட்சிக்கு ஓபிஎஸ் தலைமை வகிக்கும் வகையில் பொதுச் செயலாளராக அவரை தேர்வு செய்ய வேண்டும். ஆட்சிக்கு தலைமை எப்போதும் போல எடப்பாடியார் என்ற பார்முலாவை பாஜக முன்வைத்து இரு தரப்பையும் ஒத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
ஆனால் இரு தரப்பும் வேண்டா வெறுப்பாகவே ஒத்துக் கொண்ட நிலையில் தான் நாளை அதிமுக செயற்குழு கூடுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரத்தை ஸ்ட்ராங்காக வைத்துள்ள எடப்பாடியார் கட்சி அதிகாரத்தை முழுவதுமாக ஓபிஎஸ் வசம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்றும், அதே போல் முதல்வர் பதவி மீது ஓபிஎஸ் இன்னும் பிடிவாதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளைய செயற்குழுவில், பாஜகவின் பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது மல்லுக்கட்டாகுமா? என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.







