கொரோனா தாக்கம் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கி இருக்கும் நிலையில் முன்னணி கலைஞர்களின் கவனம் இணைய தொடர்கள் பக்கம் திரும்பியுள்ளது . இது தமிழ்சினிமாவின் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமா இப்படி ஒரு பேரிடரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக முழுமையாக முடங்கிக் கிடக்கிறது சினிமாவுலகம். இதனால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் கலைஞர்கள் குறும்படம், நடன வீடியோ என வித்தியாசமான முயற்சிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அந்த வகையில் முன்னணி கலைஞர்கள் பலரும் இந்த வெப் சீரிஸில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் .இயக்குனர் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா உள்ளிட்டோர் இணைய தொடர்களை இயக்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மணிரத்னம், நவரசா எனும் இணைய தொடரை அமேசான் நிறுவனத்திற்காக தயாரிக்க உள்ளார் .
ஒன்பது உணர்வுகளை குறிக்கும் வகையில் ஒன்பது பாகங்களாக தயாராக இருக்கும் இந்த தொடரை கௌதம் மேனன், கேவி ஆனந்த், அரவிந்த்சாமி, சித்தார்த் உள்ளிட்ட 9 பேர் இயக்க உள்ளனர். இதில் ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இணைய தொடர்களின் தாக்கம் சினிமாவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப் படங்கள் வெளியானால் கலைஞர்களுக்கு இணைய தொடர்களின் மீதான கவனம் குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.