கொரோனா பாதிப்பு எதிரொலி : மீனாட்சி அம்மன் கோயில் சரித்திரத்தில் முதல்முறையாக மதுரை சித்திரை திருவிழா ரத்து!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் சரித்திரத்தில் சித்திரைத் திருவிழா ரத்தாவது இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு காரணமாக, உலகின் ஒட்டு மொத்த இயக்கமே முடக்கப்பட்டுள்ளது. அனைத்து மத கோயில்களிலும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு சாத்தப்பட்டுள்ளன. அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு உலகப் போர்கள் நடைபெற்ற காலத்தில் கூட இப்படிப்பட்ட அவல நிலை ஏற்பட்டது கிடையாது. கொரோனா அச்சுறுத்தல் தான் உலகை ஒட்டுமொத்தமாக தலைகீழ் மாற்றம் செய்துள்ளது.

 

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழாவும் நடைபெறுமா? என்பதும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இதனால் வரும் ஏப்ரல் 25-ந் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 4-ந் தேதி நடைபெறும் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் சம்பிரதாயப்படி நடைபெறும் எனவும், அதனை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மே 4-ம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கல நாணை மாற்றிக் கொள்ளும்படியும் கோயில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. திருக்கல்யாண உற்சவம் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்று சான்றுகளை ஆராய்ந்ததில் இதற்கு முன் சித்திரை திருவிழா ரத்தானது கிடையாது என்றே தெரிய வருகிறது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் நடைபெற்ற காலங்களில் கூட வெகு விமர்சையாக சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில் முதல் முறையாக, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply