ஐயா..என் வீட்ட காணோம்யா…கண்டு பிடிச்சு தாங்க!

கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்ச பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர்.

 

இதனைதொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கான்கிரீட் வீடு அமைப்பதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை முருகேசன் மேற்கொண்டார். ஆங்காங்கே கடன்வாங்கி அஸ்திவாரத்தை போட்டு முடித்தவர் வீடு கட்டுவதற்கான நிதி வரும் என காத்திருந்தார்.

 

ஒரு மாதம், மூன்று மாதமாகி, மூன்று மாதம் மூன்று ஆண்டுகள் ஆகி கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடிக்கிறது முருகேசனின் அந்த காத்திருப்பு. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் அதிகாரியை சென்று சந்தித்த முருகேசனிடம் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் இனி நிதி வழங்க இயலாது எனவும் கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

 

அதிர்ச்சி அடைந்த முருகேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சென்று அதிகாரிகளால் கட்டப்பட்டதாக கூறப்படும் தனது வீட்டை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

 

முருகேசனின் இந்த குற்றச்சாட்டு குறித்து தற்போதைய கபிலர்மலை வட்டாட்சியர் பாலமுருகனிடம் கேட்டபோது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தகுதி அட்டை குறித்து அவரது கவனத்திற்கு வரவில்லை எனவும் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

 

கட்டடத்திற்கான அடித்தளம் போட்ட கடனைக் கூட இன்னும் முழுமையாக அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயி முருகேசன் ஒன்பது ஆண்டுகளாக அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு இதன் பிறகாவது மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply