நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; நடிகர் என்றும் பெரியார் பற்றி பேசும் முன் யோசிச்சு, சிந்தித்து அவர் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கூறியுள்ளார்.
திமுக அவசர செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ந் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
தொடர்ந்து, பெரியார் குறித்து தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; அவர் ஒரு நடிகர்.
எனவே 95 ஆண்டுகள் வாழ்ந்த பெரியார் பற்றி பேசும் முன் நண்பர் ரஜினிகாந்த் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள் என சுருக்கமாக அட்வைஸ் கூறிவிட்டு, ரஜினிக்கு எதிராக வேறு கருத்து தெரிவிக்காமல் மு.க.ஸ்டாலின் தவிர்த்தார்.
இதற்கிடையே ரஜினி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,விஷயம் தெரியாமல் இது போன்று பேசி அவ்வப்போது சிக்கலில் மாட்டிக் கொள்வது ரஜினிக்கு வாடிக்கையாகிவிட்டது என உதயநிதி கூறியுள்ளார்.






