ஹைட்ரோகார்பன் திட்டம் : மக்களின் கருத்தை கேட்காமல் அமல்படுத்தக் கூடாது..! பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்!!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்களின் கருத்தை கேட்கத் தேவையல்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு டெல்டா பகுதி விவசாயிகளும், பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் போராட்டங்களும் வெடித்தன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் எனக் கூறி இத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது. இதனால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை; பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டத்திற்கு எதிராக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

இந்த கடிதத்தில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகளும், சுற்றுச் சூழல் துறை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply