துக்ளக் விழாவில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு எதிராக போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு திராவிட அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 15-ந் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில், ரஜினி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையாகி உள்ளது. காலம் கெட்டுப் போச்சு.. அரசியல் கெட்டுப் போச்சு.. சமுதாயமும் கெட்டுப் போச்சு.. என்று எல்லாம் கெட்டுப் போச்சு என ரஜினி பேசினார். அது மட்டுமின்றி முரசொலி வைத்திருந்தால் அது திமுககாரர்; துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என புது தத்துவம் போல் பேசிய ரஜினியை பலரும் விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில், இந்த விழாவில் தந்தை பெரியார் பற்றி ரஜினி பேசியது தான் திராவிட இயக்கத்தினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. 1971-ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற தி.க.மாநாட்டில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு, செ Iருப்பு மாலை அணிவித்ததாக ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்துள்ளன. நடக்காத ஒன்றை ரஜினி திரித்துப் பேசி, பெரியாரை அவமானப்படுத்தி விட்டதாக அவர் மீது திராவிடர் கழகத்தினரும் பிற பெரியார் இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்தும் , பகிரங்க மன்னிப்பு கோர வலியுறுத்தியும் வருகின்றனர். பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி விடுத்த அறிக்கையில், ரஜினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் செய்வோம்.தமது பேச்சுக்கு ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரஜினியின் தர்பார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினர், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். இதேபோல் நாமக்கல் உள்பட பல காவல் நிலையங்களிலும் ரஜினிக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதால், பெரியார் பற்றி ரஜினி பேசியது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றே தெரிகிறது.