திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நயன்தாரா. சினிமாவில் எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக் கூடியவர் என ரசிகர்களால் புகழப்படும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படுகிறார்.
தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகிய நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் சிறந்த நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்தார். 2017 ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த அறம் படம் திரையுலகில் நயன்தாராவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது எனலாம்.
சமூக பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் தோன்றிய நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடினர். அதன் பிறகு வெளியான கோலமாவுகோகிலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களிலும் நயன்தாரா ஜொலித்தார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்திலும் நடித்துள்ளார் நயன்தாரா.
ஆனால் சமீப காலமாக வெளியான படங்களை போல இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ்க்கு வழங்கப்பட்டுள்ள காட்சிகளை விட குறைவான காட்சிகளில் நயன்தாரா நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அந்தப் படத்தில் நடித்தது தாம் எடுத்த மோசமான முடிவு என்றும், அந்த படத்தில் தமக்கு குறைந்த காட்சிகள் மட்டுமே இருந்ததாகவும் பேட்டியில் தெரிவித்திருந்தார் நயன்தாரா. தம்மிடம் தெரிவித்தது போல கதாபாத்திரம் வரவில்லை என்றும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முருகதாசின் தர்பார் படத்தில் நயன்தாரா தோன்ற அவரது கதாபாத்திரம் வலுவாக அமையவில்லை என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ரஜினியுடன் மீண்டும் கைகோர்த்த நயன்தாராவுக்கு தர்பார் படத்தில் வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கலாம் என்பதே அவரது ரசிகர்களின் ஆதங்கம்.