ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி இன்று திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், விரைவில் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொட்ட குறை,விட்ட குறை என்பது, ரஜினிக்கும், அரசியலுக்கும் மிகவும் பொருத்தம் என்றே கூறலாம். கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அரசியலுக்கு வருவது போல் திடீர், திடீரென பாவ்லா காட்டும் ரஜினி அப்புறம் மவுன சாமியாகி படம் நடிக்க போய் விடுவார். அவருடைய ரசிகர்களும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பியே வந்த நிலையில், ரஜினிக்கும் வயதாகிவிட்டது. அவருடைய ரசிகர்களும் அரை சத வயதை கடந்தவர்களாகி விட்டனர்.
இந்நிலையில், ஒரு வழியாக சஸ்பென்ஸ் கலைத்த ரஜினி, நான் அரசியலுக்கு வருவது உறுதி.2021 சட்டப்பேரவைத் தேர்தல் தான் தமது இலக்கு என 2 வருடங்களுக்கு முன் தனது ரசிகர்கள் முன்னிலையில் பகிரங்கமாக கர்ஜித்தார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமானது.கொடியும் தயாரானது. அவரது ரசிகர்களும் மீண்டும் உற்சாகமாகி, மன்றப் பொறுப்புகளைப் பெறுவதில் ஆர்வமாகினர். ஆனால் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்து 2 வருடங்கள் கடந்தும் ஆரம்பித்த பாடில்லை. இந்த 2 வருடங்களிலும் அவ்வப்போது ரஜினி பற்றிய செய்திகள் மட்டுமே பரபரப்பானது.

பாஜக ஆதரவு நிலைப்பாடு போல் காட்டி, அக்கட்சியுடன் இணையப் போகிறார். தமிழக பாஜக தலைவராகப் போகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் றெக்கை கட்ட, திடீரென எனக்கு காவிச் சாயம் பூச முடியாது எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து கமலுடன் அரசியலில் இணையப் போவதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது. தமிழக நலனுக்காக, தேவைப்பட்டால் இருவரும் இணையத் தயார் என ரஜினியும், கமலும் ஒரே நாளில், ஒரே மாதிரி வாய்ஸ் கொடுத்து மீண்டும் ஒரு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே, தேர்தல் வரும் போது பார்க்கலாம். இப்போது பேச வேண்டாம் என கமலுடன் இணைவது பற்றிய பேச்சுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இதனால், ரஜினி கூறிய 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. அதற்குள் ரஜினி கட்சியை எப்போதுதான் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி? என்ற கேள்விகள் எழத் தொடங்கி விட்டது. இதனால் எப்படியும் இந்தாண்டுக்குள் கட்சியை ஆரம்பித்து விடுவாரா? அல்லது வழக்கம் போல ஜம்ப் ஆகிவிடுவாரா? என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கி விட்டன.
இந்நிலையில் தான் நேற்று தர்பார் படம் ரிலீசாகி, அந்தப் படத்துக்கு நல்ல ரிசல்ட்டும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார் ரஜினி. வழக்கம் போல ராகவேந்திரா மன்றத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் விவாதித்துள்ளார் ரஜினி. இந்த சந்திப்பு நிகழ்ச்சி ரகசியமாகவே நடந்ததால், ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களைச் சந்திக்காமலே விருட்டென்று சென்று விட்டார் ரஜினி. இந்த ஆலோசனையில் கட்சி தொடங்குவது பற்றியே ரஜினி விவாதித்தார் என்றும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






