பிச்சைக்கார வேடத்தில் மனு தாக்கல்!

உள்ளாட்சி தேர்தல் களை கட்டிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் சிலர் நூதன முறையில் மனு தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த பொண்ணுக்கு நெறி ஊராட்சியில் சுயேச்சையாக போட்டியிடும் சட்டக்கல்லூரி மாணவர் அர்ஜூனன் வேட்புமனு தாக்கல் செய்ய வெங்காய மாலை அணிந்து வந்தார்.

 

ஊழலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய படி வந்த அவரை அங்கிருந்த மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர் தேர்தலுக்கான காப்பு தொகையாக 600 ரூபாய் பணத்தை 10 ரூபாய் நாணயமாக தேர்தல் அதிகாரியிடம் அர்ஜுனன் வழங்கினார்.

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயி, பலரது கவனத்தையும் ஈர்த்தார். சித்தலவாய் ஊராட்சியை சேர்ந்த விவசாயியான சுப்புராயன் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏர் கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பிச்சைக்காரன் போல வேடமணிந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய கையில் பிச்சைப் பாத்திரத்துடன் ஊர்வலமாக வந்த ஆறுமுகம் அங்கிருந்த பொதுமக்களிடம் 600 ரூபாயை பிச்சை எடுத்து காப்பு தொகையை செலுத்தினார்.

 

சென்னை வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மளிகைகடை வியாபாரியான சின்னசாமி காளை மாடுகளை கையில் பிடித்துக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் மாடாக உழைப்பேன் என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு வந்ததாக கூறினார்.


Leave a Reply