தமிழகத்தில் 2 கட்டங்களாக டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 என இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 6ஆம் தொடங்குகிறது.
டிசம்பர் 13 ஆம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். டிசம்பர் 18 ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறம்; கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம்; ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறம்; மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் என்ற கூறிய தேர்தல் ஆணையர் இன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 1,18,974 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மொத்த வாக்காளர்கள் 3,31,36,086 எனவும், 1.64 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகவும், 1.67 கோடி வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

Leave a Reply