கணவருடனான தகராறில் விஷம் குடிக்க திட்டமிட்ட பெண்ணால் 5மாத குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தலைமறைவான தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே கீழ பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த தம்பதி வீராசாமி, சுமதி.
இவர்களுக்கு 10 மற்றும் 6 வயதுகளில் பெண் குழந்தையும், ஐந்து வயது மற்றும் ஐந்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கணவருக்கு தெரியாமல் சுமதி அதிக வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த சுமதி அரளி விதையை பாலில் கலந்து தனது ஐந்து மாத ஆண் குழந்தைக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலை செய்து கொள்ள சுமதி திட்டமிட்டதாக தெரிகிறது. விஷம் கலந்த பாலை தயாராக வைத்த நிலையில் வீட்டிற்கு வெளியே உறவினர்கள் அழைத்ததால் சுமதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது குழந்தை அழுததால் பத்து வயது மூத்த மகள், தாய் கலந்து வைத்திருந்த விஷம் கலந்த பாலை அறியாமல் குழந்தைக்கு கொடுத்ததாக தெரிகிறது. சிறிதுநேரத்தில் சுமதி வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பாலை குழந்தை குடித்து மயங்கியதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
விஷயத்தை தாயிடம் கேட்ட மூத்தமகள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்த சுமதி தப்பியோடினார். இதுதொடர்பாக காவல்துறை விசாரித்தால் வீராசாமி தலைமறைவானார். அவர்களை காவலர்கள் தேடிவருகின்றனர். தாயின் விபரீத முடிவால் ஏதும் அறியா குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரியகுளம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.