பெண் பக்தையை “அறை”விட்ட தீட்சிதர் சஸ்பெண்ட்..! தலைமறைவானவரை இன்னும் தேடுது போலீஸ்..!!

சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து கன்னத்தில் அறைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள தர்ஷனை இன்னமும் தேடி வருகின்றனர்.

 

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் லதா (51). அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வரும் லதா, தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிடச் சென்றார். அங்குள்ள முக்குறுணி விநாயகர் கோயில் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்ய ,தேங்காய் பழத்தட்டை, தீட்சிதர் தர்ஷனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அர்ச்சனை செய்யாமலே தேங்காயை உடைத்து திருப்பித் தந்துள்ளார்.

 

அர்ச்சனை செய்யாததை லதா கேள்வி கேட்க, அவரை தகாத வார்த்தைகளால் ஏக வசனத்தில் அர்ச்சனை செய்துள்ளார் தீட்சிதர் தர்ஷன். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, லதாவை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார் தீட்சிதர் தர்ஷன். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவும் சமூக வலைதளத்தில் பரவி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், தீட்சிதரின் செயலுக்கு பெரும் கண்டனங்களும் குவிந்தன.

 

இதனால்,இந்தச் சம்பவம் குறித்து சிதம்பரம் காவல்துறையினர், தர்ஷனுக்கு எதிராக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தை ர். தலைமறைவாகி விட்ட தர்ஷனை தேடி வருகின்றனர். இந்நிலையில், தீட்சிதர் தர்ஷன் மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2 மாதங்களுக்கு தர்ஷன் பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply