சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர்கள்,45 டிரைவர்கள் ஆகியோருக்கு கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.6 மாதமாக நடைபெற்ற பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு, நீர் மேலாண்மை, கவாத்து , யோகா, வாகனம் ஓட்டுதல் , நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும்,வனக்காப்பாளர் களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங்கள், வன தோட்டங்கள், சதுப்பு நிலக்காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 550 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர் களுக்கும்,45 ஓட்டுநர்களுக்கும் இன்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயிற்சி நிறைவு செய்த வனகாப்பாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது,வனத்துறையை பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகின்றது என தெரிவித்தார். மாநிலத்தின் வனப்பரப்பு 33 விழுக்காடு எட்டிடும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என கூறிய அவர் தற்போது தமிழகத்தில் வனப்பரப்பளவு 20.21 விழுக்காடு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.2021 ல் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என இலக்காக கொண்டு இந்த அரசு செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும்,வனத்துறை பணியில் ஈடுபட இருக்கும் வனக்காப்பாளர்களுக்கு வனம் சார்ந்த பல்வேறு பணிகள் காத்திருக்கின்றது என்றும் அதற்கு தயாராக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.மேலும்,சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.