திருப்பூரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநகரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் எதிரொலியா திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்காக பத்து மருத்துவர்கள் கொண்ட குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டு நோயாளிகளை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு பரவாமல் தடுக்க போதிய மருந்து மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி தென்பட்டால் அதற்குண்டான சிகிச்சைகள் அளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.