கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அதன் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் கிளைகளுக்கான தேர்தல் இந்த மாதம் நடைபெறுகிறது.அதில் அவசியம் ஒரு மகளிர், பட்டியலினத்தவர் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது எனவும்,பா.ஜ.க ஆட்சியில் மிகப்பெரிய நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரம் உள்ளது. இதுதொடர்பாக ஆதரவு கரங்களை ஒன்றிணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது என பேசினார்.
மேலும்,ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 4 நபர்களை சந்தித்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விளக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கனகசபாபதி அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனவும்,பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 16 முதல் 20 ஆம் தேதி வரை பல்வேறு சமுதாய பிரச்னைகள் தொடர்பாகவும், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பான உறுதிமொழி என பல நிகழ்ச்சிகள் சேவை வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்.
மேலும்,கிளை, மண்டல, மாவட்ட தேர்தல் பிறகு மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும். ஆனால்,தற்போது சில மாநிலங்களில் மாநில தலைவர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால், தமிழகத்திற்கான மாநில தலைவர் இடையில் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தேர்தல் அடிப்படையில் தான் மாநில தலைமை தேர்ந்தெடுக்கப்படும். ஆனால், பிடித்தவர்களை மனு தாக்கல் செய்ய வைத்து தேர்ந்தெடுக்கப்படலாம். எங்களை பொருத்தவரை கட்சியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.ஏற்கனவே,40 லட்சம் உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது 45 லட்சமாக உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ.க்கான ஜாப் ஆர்டர் 5% ஜி.எஸ்.டி. குறைக்க மத்திய நிதி அமைச்சரிடமும், மாநில அமைச்சருமான ஜெயகுமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் நல்ல முடிவை எதிர்ப்பார்க்கலாம். ஜி.எஸ்.டி குறைப்பு என்பது மத்திய அரசு எடுக்கக்கூடிய முடிவு அல்ல,அனைத்து மாநில பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மட்டுமே எடுக்க முடியும் என தெரிவித்தார்.