இராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன்,13. வகுப்பாசிரியை அபிலஷா நேற்று மதியம் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி பள்ளி மின் மோட்டார் ஸ்விட்ச் போட கார்த்தீஸ்வரனை அபிலஷா அனுப்பினார்.இந்நிலையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போட முயன்ற கார்த்தீஸ்வரன் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியர்களின் அலட்சிய போக்கால் கார்த்தீஸ்வரன் இறந்ததாக, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் , மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் ஆசிரியர்களிடம் விசாரித்தனர். விசாரணை அறிக்கை அப்படையில், ஆசிரியர் தமிழரசு, ஆசிரியை அபிலஷா ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவர் உயிரிழப்பிற்கு காரணமான ஆசிரியர்களை மீது நடவடிக்கை எடுக்காதவரை கார்த்தீஸ்வரன் உடலை வாங்க மறுத்தனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்மேரி, ஆசிரியர் தமிழரசு ஆகியோர் உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் ஜூடி ஷியல் மாஜிஸ்டிரேட் – 2 முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.