சீமைக்கருவேல மரங்களை அழிக்க அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு “விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்” என்ற போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட பள்ளிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் சிறிய ரக செயற்கைக் கோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.

 

கரூர் மாவட் டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-வகுப்பில் படிக்கும் மாணவர் சி.நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். அந்த மாணவர்கள் குழுவிற்கு அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டியுள்ளார். ஆசிரியரின் வழிக்காட்டிதலின் படி 30 கிராம் எடை கொண்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரித்துள்ளனர். தயாரிப்பு குறித்த வீடியோவையும் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதேபோன்று தமிழகத்தின் மேலும் சில பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பள்ளிகளில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியும் இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி வருகிற 11ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என கொண்டாடப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாளில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மாணவர்களும், ஆசிரியர் தனபாலும் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியிலுள்ள ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பிற்கு செல்கின்றனர். அங்கு, ஹீலியம் வாயுவைக் கொண்டு இயக்கப்படும் ராட்சத பலூன் உதவியுடன் நீர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், அப்போது விண்வெளியில் குறிப்பிட்ட தூரம் சென்றதும் பலூன் வெடித்து செயற்கைகோள் மட்டும் தனியாக பிரிந்து அங்கிருந்து வானிலை குறித்த தகவல்களை சேகரிக்கும்.

 

பின்பு பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வந்தடையும் என்கிறார்கள். மேலும் கடுப்பாட்டு அறையில் இருந்து செயற்கைக்கோளை இயக்குவதற்கு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

முன்னதாக இதுகுறித்து மாணவர்கள் குழு தலைவர் நவீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்போது மிக முக்கிய பிரச்னையாக தண்ணீர் பற்றாக்குறை, குறைந்த மழைப்பெழிவு, நிலத்தடி நீர் மட்டக் குறைவு ஆகியவற்றைச் சந்திக்கின்றோம். மேலும் நிலத்தடி நீரின் அதலபாதாளம் வரை சென்று உறிஞ்சி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதில் சீமைக்கருவேல மரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

 

அதனால் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் விதமாக அதன் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், விதை ஆகியவற்றை சாறாக பிழிந்து எடுத்து பின்னர் அதனை உலர வைத்து படிகமாக மாற்றி 3.5 சென்டிமீட்டர் கனசதுரம் கொண்ட கலனில் 6 பிரிவுகளாக வைத்துள்ளோம்.

இந்த நீர் செயற்கைக்கோள் விண்ணில் சென்று கீழே வரும்போது வளிமண்டல அழுத்தம், சூரியக் கதிர்வீச்சு தாக்கம், ஈரப்பதம், வெப்பநிலை வேறுபாடு காரணமாக உள்ளே உள்ள படிமங்களில் ஏற்படும் ஜீன் மற்றும் டி.என்.ஏ மாறுபாடுகளை அறிந்து அதன் வாயிலாக இத்தாவரத்தை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உள்ளோம்” என மாணவர் நவீன் தெரிவித்துள்ளார்.

 

அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த சாதனை முயற்சியை முதன்மைக்கல்வி அலுவலர் சி.முத்துக்கிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், நீர் செயற்கைக்கோளை கண்டுபிடித்த மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோருக்கும் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply