நடிகர் சங்க உறுப்பினர் நீக்கம்: உயர்நீதிமன்ற நீதிபதி திருப்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் நீக்கம் குறித்த நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சங்க நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டு இருப்பதால் வாக்காளர் பட்டியலை முறையாக தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த ஒரு குழுவை அமைக்க கோரி ஏழுமலை என்று நீக்கப்பட்ட உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 

நீதிபதி சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில் வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கத்தின் வழக்கறிஞர் 3,171 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருப்பதாக கூறினார். சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கபட்டு இருப்பதாகவும், இவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து உறுப்பினர்கள் நீக்கம் குறித்து தீர்மான ஆவணங்களை பிற்பகலில் சமர்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

வழக்கு மதியம் விசாரணைக்கு வந்த போது உறுப்பினர் நீக்கம் குறித்த ஆவணங்களும், தீர்மானங்களும் நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யபட்டன. உறுப்பினர் நீக்கம் குறித்த நடைமுறைகள் சரியாக பின்பற்றபட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் நோட்டீஸ் அனுப்பாமலேயே உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகவும் , அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Leave a Reply