கோவையில் தொடரும்.. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி வேட்டை!

கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ள சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம்.ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கோவையின் பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.சுந்தராபுரம் பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்க கோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.விண்ணப்பத்தை பரிசீலித்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் தனது அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் மூலம் ஆறு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அதனை தர மறுத்த சோமசுந்தரம் ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதுடன் அதில் முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும் சான்றிதழ் வழங்கிய பின்னர் மீதமுள்ள தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சோமசுந்தரம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம்புகார் அளித்துள்ளார்.பின்னர், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார்.அப்பொழுது,மண்டல அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வீட்டு வரி புத்தகம் வழங்க 12 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கோவை மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார்,தரகர் குணசேகரன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

 

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கோவை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply