கோவை பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ! சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்!

கோவையை அடுத்த இருகூரில் செயல்பட்டு வரும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவையை அடுத்துள்ள இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோனில் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 7 வருடங்களாக பஞ்சு மொத்த விற்பனை செய்யும் குடோனாக வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த குடோனில் வட இந்தியவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் எரிந்து நாசமடைந்துள்ளது.

 

தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் பீளமேடு,சூலூர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிங்காநல்லூர் காவல்துறையினரும், போக்குவரத்து காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர். சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply