பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்த, காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் இன்று தொடங்கியது.இதில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 25 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்கமுடியவில்லை.
இதையடுத்து மாநில தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இதை காரிய கமிட்டி ஏற்குமா? என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில்தான் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.