இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி 287 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
இதேபோல், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 306 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களிலும், இதர கட்சிகள் 104 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
மேலும், நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118 இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2019ல் தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பானது தமிழகத்தில் திமுக கூட்டணி 29 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், அதிமுக கூட்டணி 9 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.
நியூஸ் 18 – ஐபிஎஸ்ஓஎஸ் கருத்து கணிப்பு திமுக கூட்டணி 22 முதல் 24 மக்களவைத் தொகுதிகள் வரை கைப்பற்றலாமென்றும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றலாமென்றும் தெரிவிக்கிறது.
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு திமுக கூட்டணி 27 மக்களவை இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 11 மக்களவை இடங்களை கைப்பற்றுமென்றும் தெரிவிக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா என்பது வாக்குப்பதிவு அன்று தெரிந்துவிடும்.
அதேபோல் தேர்தலில் வெற்றியடைந்த கட்சி எது, பெரும்பான்மை கிடைத்தது யாருக்கு, அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் மே 23-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.