கம்பு ஊன்றி ஓட்டு போட வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்..பாப்பம்பட்டி வாக்குச்சாவடியில் ருசிகரம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி இன்று ஜனநாயக கடமையாற்றினார்.

 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

 

இது கடைசி கட்ட தேர்தல். மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு கம்பு ஊன்றியபடியே கூன் விழுந்த மூதாட்டி ஒருவர் வந்தார்.

 

அவர் பெயர் துளசியம்மாள். அவருக்கு 103 வயது ஆகிறதாம். தள்ளாத வயதிலும் வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றிய துளசியம்மாளை அனைவரும் பாராட்டினர்.

 

தேர்தல் ஆணையம் எந்தளவிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தியும் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 100 சதவிகித வாக்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் தள்ளாத வயதில் கூன் விழுந்த நிலையிலும் கம்பு ஊன்றிக்கொண்டு வந்தாவது வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி இன்றைய தலைமுறைக்கு ஒரு உதாரணமே..


Leave a Reply