பாஜகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவுக்கு தண்டனை கொடுங்க! திருநாவுக்கரசர் வேண்டுகோள்!!

பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த தமிழகத்தில் உள்ள மோசடி கும்பலுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தமிழக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

 

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பட்டணம்புதூர், இருகூர், சூலூர், பள்ளபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி பிறகு, அவர் தனது பிரச்சாரத்தை துவக்கினார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:

 

நாடாளுமன்ற தேர்தலில், பாஜக அரசையும், மோடி அரசையும் அகற்றும் விதத்தில் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ உள்ளது. பொய்களை கூறி மோடி ஆட்சிக்கு வந்தார்.

 

 

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என்றார். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவேன் என்றார். ஆனால் அப்படி செய்யவில்லை.

 

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்திற்கு மோடி எதுவும் செய்ய வில்லை. உலகத்திலேயே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய மோசடி. 10 ஆயிரம் 20 ஆயிரம் கோடிகள் கடன் வாங்கியவர்கள், வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

 

இவர்களுடன் தமிழக மோசடி கும்பலும் சேர்ந்துள்ளது. அதிமுக இப்போது, பல கட்சிகளாக உடைந்து விட்டது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காகவே, அதிமுகவிற்கு தண்டனை வழங்க வேண்டும். தினகரன் வேட்பாளருக்கு வாக்களிப்பது மூலம் எந்த மாற்றமும் உருவாகப் போவதில்லை. கமல் தனியாக கட்சி ஆரம்பித்து நாட்டில் ஆட்சிக்கு வருவது சாதாரண விஷயம் இல்லை என்று பேசினார்.

 

பிரச்சாரத்தில், வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply