பாரதிய ஜனதாவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு நடத்தி வருகிறார் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அணி மாற முயற்சி செய்வதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று முதலில் அறிவித்தவர், மு.க. ஸ்டாலின். அதன் பின் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது திமுக. எனினும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு திடீரென மாறும் என்பது கடந்த கால வரலாறு.
திமுக தலைவர் ஸ்டாலினும், ராகுலை முன்னிறுத்தினாலும், மூன்றாவது அணி தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகே மூன்றாவது அணி பற்றி முடிவெடுக்க முடியும் என்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாரதிய ஜனதாவுடன் திமுக தொடர்பில் இருப்பதாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனே தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பதவி பசி காரணமாக பாஜகவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக வெற்றி பெறும் என்பது தெரிந்துதான் எங்களிடம், திமுக தலைவர் பேசி வருகிறார் என்றார்.
ஏற்கனவே, பாஜகவிடம் ஐந்து கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு திமுக பேசி வருவதாக, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழிசை வெளியிட்டுள்ள இந்த தகவல், ஸ்டாலின் அணி மாற முயற்சி செய்கிறாரோ என்று திமுகவினர் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.